ஐதராபாத்தில் வெப்பக்காற்று பலூன் திருவிழா தொடக்கம்
மாநில சுற்றுலாத் துறை மந்திரி வெப்பக்காற்று பலூனில் சுமார் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்தார்.;
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோல்கொண்டா கோட்டை அருகே உள்ள கோல்ப் விளையாட்டு மைதானத்தில், வெப்பக்காற்று பலூன் திருவிழா இன்று தொடங்கியது. இந்த விழாவை மாநிலம் சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை மந்திரி ஜுபள்ளி கிருஷ்ண ராவ் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் வெப்பக்காற்று பலூனில் ஏறி சுமார் 13 கி.மீ. தூரத்திற்கு ஒன்றரை மணி நேரம் பயணம் செய்தார். கோல்கோண்டா கோல்ப் மைதானத்தில் தொடங்கி, அப்பாஜிகுடா பகுதி வரை வெப்பக்காற்று பலூனில் பயணம் செய்த அவர், அங்குள்ள நிலப்பரப்பை வான்வழியாக பார்வையிட்டார்.
இந்த பயணத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜுபள்ளி கிருஷ்ண ராவ், “இது ஒரு மறக்க முடியாத அனுபவம். இந்த வெப்பக்காற்று பலூன் திருவிழா மாநிலத்தின் சுற்றுலாத் துறையில் முக்கியமான அத்தியாயம்” என்று குறிப்பிட்டார்.
தெலுங்கானா மாநில சுற்றுலாத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பலூன் திருவிழா, இன்று(16-ந்தேதி) தொடங்கி 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சர்வதேச தரத்திலான 15 வெப்பக்காற்று பலூன்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.