சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
நக்சலைட்டுகளுக்கு எதிராக மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.;
கோப்புப்படம்
சுக்மா,
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கு எதிராக மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. குறிப்பாக வருகிற மார்ச் மாதத்துக்குள் நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சபதம் ஏற்றுள்ளார். அதேநேரம் சரணடையும் நக்சலைட்டுகளுக்காக மறுவாழ்வு நடவடிக்கைகளும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதை பயன்படுத்தி ஏராளமான நக்சலைட்டுகள் சரணடைந்து வருகின்றனர்.
அந்தவகையில் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டு அமைப்பில் முன்னணியில் செயல்பட்டு வந்த 29 நக்சலைட்டுகள் போலீசாரிடம் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். இதில் தலைக்கு ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்த போடியம் புத்ரா என்பவர் முக்கியமானவர் ஆவார்.
கோகுண்டா பகுதியில் இயங்கி வந்த இவர் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர் ஆவார். முன்னதாக கடந்த 7-ந்தேதியும் இந்த மாவட்டத்தில் 26 நக்சலைட்டுகள் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.