ஜோஹோ மெயிலுக்கு மாறி விட்டேன்; டிரம்ப் பாணியில் பதிவிட்ட அமித்ஷா
இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு என்ற டிரம்பின் முடிவை தொடர்ந்து, பொதுமக்கள் இந்தியாவில் தயாராகும் பொருட்களை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது.;
புதுடெல்லி,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்நாட்டிலேயே தயாரான ஜோஹோ மெயிலுக்கு மாறியுள்ளார். சென்னையை அடிப்படையாக கொண்டு 2008-ம் ஆண்டு ஜோஹோ மெயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கூகுள் மெயிலுக்கு மாற்றாக இருக்கும் என பார்க்கப்பட்டது. இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் அமித்ஷா வெளியிட்ட செய்தியில், அனைவருக்கும் வணக்கம். நான் ஜோஹோ மெயிலுக்கு மாறி விட்டேன்.
என்னுடைய மாற்றம் செய்யப்பட்ட இ-மெயில் முகவரியை கவனித்து கொள்ளுங்கள். என்னுடைய புதிய இ-மெயில் முகவரியானது, amitshah.bjp@zohomail.in ஆகும். வருங்காலத்தில் மெயில் அனுப்புவதற்கு இந்த முகவரியை பயன்படுத்தவும் என பதிவிட்டு உள்ளார்.
அவர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நினைவுப்படுத்தும் வகையில், இந்த விசயத்தில் நீங்கள் கவனம் செலுத்தியதற்காக நன்றி என அந்த பதிவை முடித்துள்ளார். இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு என்ற டிரம்பின் முடிவை தொடர்ந்து, பொதுமக்கள் இந்தியாவில் தயாராகும் பொருட்களை (மேக் இன் இந்தியா) பயன்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவருடைய இந்த மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அரட்டை (சாட்டிங்) என்ற செயலியை சமீபத்தில் ஜோஹோ நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இது இந்தியாவில், இந்தியர்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியை அரட்டை வலைதளத்தில் அல்லது கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.