இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம்; 3-வது தரப்பு தலையிடவில்லை - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

கடந்த காலங்களில் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களுக்கு காங்கிரஸ் பதிலளிக்கவில்லை என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.;

Update:2025-07-30 18:56 IST

Image Courtesy : PTI

புதுடெல்லி,

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.

அதைத் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்தது. இதையடுத்து தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த மே 10-ந்தேதி அறிவித்தார்.

இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன. இதற்கிடையில் டொனால்டு டிரம்ப், தனது முயற்சியால்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததாக பலமுறை கூறினார். இருப்பினும் இருநாட்டு ராணுவ தலைவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகே இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

மேலும் கடந்த மாதம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் டொனால்டு டிரம்ப்பை தொடர்பு கொண்டு சுமார் 35 நிமிடங்கள் உரையாடினார். இந்த உரையாடலின்போது, இந்தியா மத்தியஸ்தத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும், போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் வேண்டுகோளின்படியே தொடங்கப்பட்டதாகவும் மோடி உறுதியாக கூறினார் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் டொனால்டு டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அதே கருத்தையே தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்தத்தில் 3-வது தரப்பு தலையிடவில்லை என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின்போது அவர் கூறியதாவது;-

"பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த ஏப்ரல் 22-ந்தேதி முதல் ஜூன் 16-ந்தேதி வரை பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபருக்கும் இடையே எந்த தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை. கடந்த காலங்களில் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களுக்கு காங்கிரஸ் பதிலளிக்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சி பயங்கரவாத பிரச்சினையில் இந்தியாவை பாகிஸ்தானுடன் இணைத்து பேசுகிறது.

மோடி அரசு தற்போது நிலைமையை சரி செய்து வருகிறது. பாகிஸ்தானால் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடியை கொடுக்கிறது. எந்த அணு ஆயுத அச்சுறுத்தலுக்கும் இந்தியா அடிபணியாது. கடந்த பத்தாண்டுகளில் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் எதிர்வினையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் அது நிரூபிக்கப்பட்டுள்ளது."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்