மும்பையில் நடைபெறும் இந்திய கடல்சார் மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்றார்
மும்பையில் நடக்கும் இந்திய கடல்சார் வார விழாவில் தமிழ்நாடு அரசும் பங்கேற்றுள்ளது.;
மும்பை,
இந்திய கடல்சார் வாரம் என்ற 5 நாள் சர்வதேச மாநாடு மும்பையில் நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில், 85-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பதோடு, 350-க்கும் மேற்பட்ட சர்வதேச பேச்சாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று கருத்துகளை வழங்குகின்றனர்.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதற்காக மும்பையில் உள்ள பம்பாய் கண்காட்சி மையத்திற்கு அவர் வருகை தந்தார். தொடர்ந்து அங்கு நடக்கும் உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாகிகளின் கூட்டமைப்பு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
அந்த கூட்டத்தில் உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாகிகள் கூட்டமைப்பு, சர்வதேச கடல்சார் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், பெரும் முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சர்வதேச கடல்சார் பங்களிப்பாளர்களை ஒருங்கிணைத்து, கடல்சார் சூழலமைப்பின் எதிர்காலம் குறித்த விவாதிக்கப்பட்டது.
மும்பையில் நடக்கும் இந்திய கடல்சார் வார விழாவில் தமிழ்நாடு அரசும் பங்கேற்றுள்ளது. கடல்சார் வாரியம், தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் குழுவாக இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகம், தொழில், நீலப்பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சியை முன்னெடுத்து, முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் வணிக அமர்வுகளை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.