கேரளா: ரெயிலில் பயணியிடமிருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய கும்பல் - 4 பேர் கைது
கைது செய்யப்பட்ட 4 பேரும் அரியாவை சேர்ந்த கொள்ளை கும்பல் என்பது தெரியவந்தது.;
திருவனந்தபுரம்,
கேரளாவை சேர்ந்த வயதான தம்பதி நேற்று சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோழிக்கோடு பயணித்துள்ளனர். ரெயிலில் ஏசி வகுப்பில் பயணித்த இந்த தம்பதி ரூ. 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், அதே ஏசி வகுப்பில் அரியானாவை சேர்ந்த இளைஞர்கள் சில பயணித்துள்ளனர். அப்போது, ரெயிலில் இரவு உறங்கியபோது தம்பதியின் பையில் இருந்த நகைகளை கும்பல் கொள்ளையடித்துள்ளது. கோழிக்கோடு சென்றப்பின் வீட்டில் வைத்து பைகளை தம்பதி திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில் இருந்த நகைகள் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் ரெயிலில் ஏறியபோது வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் கையை வைக்க உதவியதாகவும், அந்த இளைஞர்களே நகைகளை திருடியிருக்கலாம் என கூறினர்.
இதனை தொடர்ந்து , ஏசி பெட்டியில் பயணித்த பயணிகளின் விவரங்கள், சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல் உள்ளிட்டவை அடிப்படையில் கேரளா-கர்நாடகா எல்லையில் 4 இளைஞர்களை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் அரியாவை சேர்ந்த கொள்ளை கும்பல் என்பது தெரியவந்தது. இந்த 4 பேரும் ரெயிலில் பயணித்த வயதான தம்பதியிடமிருந்து ரூ. 50 மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகளை மீட்டனர். இந்த கும்பல் ரெயிலில் ஏசி வகுப்புகளில் டிக்கெட் புக் செய்து அதில் பயணிக்கும் பயணிகளிடம் கொள்ளையடித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.