முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்...70 வயதில் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி
வயதானாலும் மனதில் காதல் இளமையாக இருக்கிறது என்று கோவிந்தன் நாயர் கூறியுள்ளார்.;
திருவனந்தபுரம்,
ஒருமுறைக்கூட காதலை அனுபவிக்காதவர்கள் இவ்வுலகில் யாருமே இல்லை. ஒரு சில காதல் அழ வைக்கும்.. ஒரு சில காதல் அனுபவத்தை கொடுக்கும்.ஒரு சிலருக்கு காதல் இளமையில் வரலாம் ஒரு சிலருக்கு திருமணம் ஆன பிறகு மனைவி மீது காதல் வரலாம். ஒரு சிலருக்கு முதுமையில் வரலாம். காதலில் இருப்பதையே மக்கள் ஆச்சர்யமான உணர்வுகளில் ஒன்றாக கருதுகின்றனர். காதல் ஒரு இயற்கையான விஷயம் என்பதால் என்னவோ இது வயது வித்தியாசம், அந்தஸ்து, சாதி, மதம் என்று எதையும் பார்த்து வருவதில்லை. நம்முடைய நாட்களில் நிறைய பேரை சந்திக்கிறோம் பழகுகிறோம். ஆனால் எல்லோர் மீதும் காதல் வருவதில்லை. யாராவது ஒரு நபரைத் தான் மனம் தேடுகிறது. இது தான் இயற்கை செய்யும் அதிசயம் ஆகும் அந்தவகையில்,
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் 70 வயது முதியவர்கள் இருவர், திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ வைத்துள்ளது. 72 வயதான கோவிந்தன் நாயர் மற்றும் 70 வயதான சரஸ்வதி ஆகியோருக்கிடையே, காதல் மலர்ந்து திருமணம் மூலம் ஒருவரையொருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக முதியோர் இல்லத்தில் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள், நல்ல நட்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.இந்த நட்பு காலப்போக்கில் ஆழமான காதலாக மாறி, இருவரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
முதியோர் இல்ல நிர்வாகத்தின் ஆதரவுடன், எளிமையான முறையில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் நண்பர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ள மற்றவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
வயதானாலும் மனதில் காதல் இளமையாக இருக்கிறது. இந்த வயதில் எங்களுக்கு இப்படியொரு பந்தம் அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என கோவிந்தன் நாயர் உருக்கமாகத் கூறியுள்ளார். சரஸ்வதி அம்மாவும், இந்தத் திருமணம் எங்கள் வாழ்க்கைக்குப் புதிய அர்த்தத்தை அளித்துள்ளது என்று புன்னகையுடன் கூறியுள்ளார்.