இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் கேரளா: பினராயி விஜயன் அறிவிப்பு
வறுமை விகிதம் அதிகரித்திருந்த 1961-62 காலகட்டத்தில் இருந்து மாநிலம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது என பினராயி விஜயன் பேசியுள்ளார்.;
திருவனந்தபுரம்,
கேரளாவின் நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கேரள சட்டசபையில் விதி 300-ன் கீழ் முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் பேசும்போது, இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை கேரளா அடைந்து சாதனை படைத்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார்.
நூறாண்டுக்கு முன்பு மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவது பற்றிய யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னான தொடக்க ஆண்டுகளில் நீண்ட, நெடிய போராட்டங்கள் மேற்கொண்டு இதனை அடைந்திருக்கிறோம். அந்த போராட்டங்களின் விளைவால், ஒருங்கிணைந்த கேரளா உருவானது.
அதுவே மலையாளிகளின் கனவாகவும் இருந்தது. இன்று ஒருங்கிணைந்த கேரளா உருவாகி 69 ஆண்டுகள் ஆகின்றன. வறுமை விகிதம் அதிகரித்திருந்த 1961-62 காலகட்டத்தில் இருந்து மாநிலம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது.
அப்போது கிராமப்புறத்தில் 90.75 சதவீதம் என்ற அளவிலும், நகர்ப்புறத்தில் 88.89 சதவீதம் என்ற அளவிலும் வறுமை கோட்டுக்கு கீழே மக்கள் இருந்தனர். இந்நிலையில், வறுமையை ஒழித்த முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது என்று பினராயி விஜயன் சுட்டிக்காட்டி பேசினார். எனினும், காங்கிரஸ் கட்சி இதனை ஏற்க மறுத்துள்ளது.