மகா கும்பமேளா.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பூடான் மன்னர்
மகா கும்பமேளா தொடங்கியதில் இருந்து இதுவரை 37.5 கோடி பேர் புனித நீராடியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
பிரயாக்ராஜ்:
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள், சாதுக்கள், ஆன்மிக அமைப்புகளின் தலைவர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். வெளிநாட்டு தலைவர்களும் இங்கு வந்து புனித நீராடுகின்றனர்.
அவ்வகையில், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். புனித நீராடுவதற்கு முன்பு சூரியனுக்கு 'அர்க்யா' சமர்ப்பித்தல் போன்ற சடங்குகளை செய்தார். அவருடன் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், மந்திரிகள் சுதந்திர தேவ் சிங் மற்றும் நந்த கோபால் குப்தா ஆகியோரும் பங்கேற்று புனித நீராடினார்.
இந்தியா - பூடான் நல்லுறவு மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பூடான் மன்னரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
திரிவேணி சங்கமத்தில் இன்று காலை முதல் மதியம் வரை 54 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். மகா கும்பமேளா தொடங்கியதில் இருந்து இதுவரை 37.5 கோடி பேர் புனித நீராடியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகா கும்பமேளா வரும் 26-ம் தேதி நிறைவடைகிறது.