ஆன்லைன் வழக்கு விசாரணையில் பீர் குடித்த வழக்கறிஞர்; குஜராத் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
குஜராத் ஐகோர்ட்டின் நீதிபதிகள் ஏ.எஸ். சுபேஹியா மற்றும் ஆர்.டி. வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு விசாரணை செய்தது.;
வதோதரா,
குஜராத்தில் ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை ஒன்று ஆன்லைன் வழியே நடந்து கொண்டிருந்தது. குஜராத் ஐகோர்ட்டின் நீதிபதிகள் ஏ.எஸ். சுபேஹியா மற்றும் ஆர்.டி. வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்த இந்த விசாரணையில், மூத்த வழக்கறிஞரான பாஸ்கர் தன்னா என்பவர் வீடியோ கான்பரன்சிங் வழியே கலந்து கொண்டார்.
ஆனால், விசாரணையின்போது இடையே தன்னா, ஒரு கையில் பீர் கோப்பையை வைத்து கொண்டும், அதனை மெதுவாக பருகியபடியும் இருந்துள்ளார். மற்றொரு கையில் தொலைபேசி வழியே பேசியபடியும் காணப்பட்டார். இது நீதிபதிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் வழியே நடந்த விசாரணையின்போது பீர் குடித்து கொண்டிருந்த தன்னாவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு பதியவும் குஜராத் ஐகோர்ட்டு தரப்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
குஜராத் ஐகோர்ட்டின் நீதிபதிகள் ஏ.எஸ். சுபேஹியா மற்றும் ஆர்.டி. வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறும்போது, தன்னாவின் செயலை தவிர்த்து விட்டு போக முடியாது. அவருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு பதியப்பட வேண்டும் என தெரிவித்தது.
இதுபற்றி தன்னாவுக்கு எதிராக தானாக முன்வந்து பதிவாளர் வழக்கு பதிய வேண்டும் என கேட்டு கொண்டதுடன் அதுபற்றிய அறிக்கை ஒன்றை அடுத்த விசாரணை தேதியன்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமர்வு உத்தரவிட்டு உள்ளது.