காரில் சென்ற பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்

பெண் விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.;

Update:2025-06-04 08:55 IST

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் மண்டவ்வாலா மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி ரோகித் நகி. இவர் அம்மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி தலைவராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், ரோகித் நகி நேற்று முன் தினம் இரவு காரில் தனது நண்பர்களுடன் பிடல் சவுக் நகரில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர் திடீரென ரோகித் நகியின் காரை இடைமறித்தனர். பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு காரில் இருந்த ரோகித் நோக்கி சரமாரியாக சுட்டார். பின்னர், உடனடியாக பைக்கில் 2 பேரும் தப்பிச்சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரோகித்தின் நண்பர் அவரை காரிலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ரோகித்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ரோகித் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த அசார் தியாகி என்ற நபரை தேடி வருகின்றனர். பெண் விவகாரத்தில் பா.ஜ.க. இளைஞரணி தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்