எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைப்பு

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.;

Update:2025-08-08 13:26 IST

புதுடெல்லி,

பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகிறது. இந்த பிரச்சினையை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 15வது நாளான இன்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதலே, எதிர்க்கட்சிகள் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து முதலில் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல மக்களவை 12 மணிக்கு கூடியதும் பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவை பிற்பகல் 3 மணி வரை இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டன. இதற்கிடையில், இன்று மக்களவையில் தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா, 2025 பரிசீலித்து நிறைவேற்றப்பட உள்ளது. மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இச்சட்டத்தை முன்மொழிந்தார். மேலும், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்புச் சட்டம், 2022-ல் திருத்தங்களையும் அவர் முன்மொழிய உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்