கணவரை பிரிந்த பெண்ணுடன் காதல்; அடுத்து வந்த சந்தேகம் - இளம்பெண், 2 குழந்தைகள் படுகொலை

கொலை சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் மதுபோதையில் பிரமோத் காந்தி உளறியுள்ளார்.;

Update:2025-06-25 16:58 IST

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள சஜ்பஹார் கிராமத்தை சேர்ந்த பிரமோத் காந்தி என்பவர், தனது காதலி மற்றும் அவரது 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டதாக மதுபோதையில் பேசிக்கொண்டிருப்பதாக கடந்த 23-ந்தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போது, மண்ணில் புதைக்கப்பட்ட சுபத்ரா தாக்கூர், அவரது 14 வயது மகள் மற்றும் 6 வயது மகன் ஆகிய மூவரின் உடல்களையும் போலீசார் மீட்டனர். பின்னர் அந்த உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதே சமயம், பிரமோத் காந்தி அண்டை மாநிலமான ஜார்கண்டின் தலைநகர் ராஞ்சிக்கு தப்பியோடினார். அவரை பிடிப்பதற்காக சத்தீஷ்கார் போலீசார் தனிப்படை அமைத்து ஜார்க்கண்ட் சென்றனர்.

பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு ராஞ்சியில் பிரமோத் காந்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முன்னதாக, இளம்பெண் சுபத்ராவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த நிலையில், அவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், சுபத்ராவுடன் பிரமோத் காந்திக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து சுபத்ராவும், பிரமோத் காந்தியும் லிவ்-இன் முறையில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சுபத்ராவின் நடத்தையில் பிரமோத் காந்திக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுபத்ரா மீது கோபத்தில் இருந்த பிரமோத் காந்தி, கடந்த 22-ந்தேதி இரவு பெல்ட்டால் சுபத்ராவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் சுபத்ராவின் 2 குழந்தைகளையும் அதே போல் கொடூரமாக கொலை செய்த பிரமோத் காந்தி, மூவரின் உடல்களையும் குழி தோண்டி புதைத்துள்ளார்.

இதன் பின்னர் மறுநாள் காலை மதுபோதையில் இது தொடர்பாக அக்கம்பக்கத்தினரிடம் பிரமோத் காந்தி உளறியபோது, இந்த குற்றச்செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனிடையே, கைது செய்யப்படுவதற்கு முன்பு விஷத்தை குடித்துவிட்டதாக பிரமோத் காந்தி கூறியதையடுத்து அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்