பதிலளிப்பதை அவமானமாக கருதுகிறார்; பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
மன்மோகன் சிங் காலத்தில் செய்யப்பட்ட பணிகளில் 10 சதவீதம் கூட கடந்த 11 ஆண்டுகளில் செய்யப்படவில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் ஆய்வுத்திட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசினார். அவர் கூறும்போது, ‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறைவாக பேசி, அதிக பணிகளை செய்வார். ஆனால் தற்போதைய பிரதமர் அதிகம் பேசுகிறார், செயல்பாடுகள் குறைவு. மன்மோகன் ஜி எப்போதும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பார்.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும், கருத்துகளுக்கும் பதிலளிப்பார். ஆனால் இன்றைய பிரதமரோ எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை அவமானமாக கருதுகிறார்’ என குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறும்போது, ‘மன்மோகன் சிங் காலத்தில் செய்யப்பட்ட பணிகளில் 10 சதவீதம் கூட கடந்த 11 ஆண்டுகளில் செய்யப்படவில்லை.
படித்துவிட்டு தலைவர்களாக மாறுபவர்களுக்கு அதிக அறிவு இருக்கும், அவர்கள் அதிகமாக வேலை செய்கிறார்கள். அவர்கள் விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை’ என்றும் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 2008-ம் ஆண்டின் உலக பொருளாதார மந்த நிலையின் நிழல் இந்தியா மீது விழ விடவில்லை எனக்கூறிய கார்கே, அப்போது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.