கர்நாடகா: இந்து மதம் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட இளைஞர் விமான நிலையத்தில் கைது
மங்களூரு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மங்களூரு உலைபெட்டு பகுதியை சேர்ந்த இளைஞர் அப்துல் காதர் நிகத் (வயது 27). இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். இதனிடையே, சவுதியில் இருந்தவாறு அப்துல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்து மதம் குறித்து அவதூறு கருத்து, வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இது தொடர்பாக மங்களூரு போலீசில் அப்துல் மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அப்துல் நேற்று சவுதி அரேபியாவில் இருந்து கேரளா வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த மங்களூரு போலீசார் உடனடியாக இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், கோழிக்கோடு விமான நிலையத்தில் அப்துல் காதரை கைது செய்தனர். இதையடுத்து, அப்துல் காதரை மங்களூரு போலீசார் கர்நாடகாவுக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.