அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.;
புதுடெல்லி,
தமிழகத்தில் 98.45 லட்சம் முன்னுரிமை ரேஷன் கார்டுகளில் 3 கோடி உறுப்பினர்களும், 18.64 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுகளில் 62.88 லட்சம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த 2 கார்டுதாரர்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட அளவுக்கு கோதுமையை தேசிய ஒதுக்கீட்டின் கீழ் மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.
இந்த நிலையில் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் சரிபார்ப்பு வாயிலாக, ‘பாயிண்ட ஆப் சேல்' என்ற விற்பனை முனைய கருவியில் விரல் ரேகையை வைத்து உண்மை தன்மையை உறுதி செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
எனினும் இதற்கான பணி முழுமையாக முடிவடையவில்லை. இன்னும் 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர். இதையடுத்து இந்த பணியை வேகமாக முடிக்குமாறு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, “விரல் ரேகை பதிவு செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனை குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை” என்றனர்.