இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் - தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த உறவினர்கள்
இளம்பெண்ணின் உறவினர்கள் ஆதித்யாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு தர்மஅடி கொடுத்தனர்.;
பெங்களூரு,
சிக்கமகளூரு டவுன் சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா (வயது 28). இவர் டவுன் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், ஆதித்யாவுக்கும், அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். மேலும், அவர்கள் இருவரும் உணவு மற்றும் டீ குடிப்பதற்கு வெளியே சென்று வந்துள்ளனர்.
அப்போது ஆதித்யா இளம்பெண்ணுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். எதற்கு புகைப்படம் எடுக்கிறாய்? என இளம்பெண் கேட்டதற்கு, “இருவரும் நண்பர்கள் தானே, அதனால் உன்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்கிறேன்” என ஆதித்யா தெரிவித்துள்ளார். அப்போது இதனை இளம்பெண் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து இளம்பெண்ணிடம் செல்போன் மூலம் அடிக்கடி ஆதித்யா பேசி வந்துள்ளார். அப்போது திடீரென தனது ஆசைக்கு இணங்கும்படி இளம்பெண்ணிடம் அவர் கூறினார். இதனை கேட்ட இளம்பெண் ஆதித்யாவை திட்டிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார். மேலும், அவரின் செல்போன் எண்ணையும் இளம்பெண் ‘பிளாக்’ செய்துவிட்டார். ஆனாலும், வெவ்வேறு எண்களில் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு ஆதித்யா தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மீண்டும் என்னை தொடர்பு கொண்டால் போலீசில் புகார் அளித்திடுவேன் என இளம்பெண் அவரை கண்டித்தார். இதனால் கோபமடைந்த ஆதித்யா இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதனை பார்த்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும், இதுகுறித்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இளம்பெண் தெரிவித்தார்.
இதையடுத்து இளம்பெண்ணின் உறவினர்கள் ஆதித்யாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் ஆதித்யாவை அவர்கள் பசவனஹள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பசவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.