அதிர்ச்சி சம்பவம்: வாங்கிய கடனுக்காக விவசாயியின் கிட்னியை பறித்த கந்துவட்டி கும்பல்
கொல்கத்தா அழைத்துச் சென்று, அங்குள்ள மருத்துவமனையில் விவசாயிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு கிட்னியை அகற்றினர்.;
சந்திராப்பூர்,
மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள மின்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரோஷன் சதாசிவ் குடே (வயது29). விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், பால் வியாபாரம் செய்ய கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 லட்சம் கந்துவட்டிக்கு கடன் வாங்கினார். அந்த தொழிலிலும் நஷ்டம் ஏற்படவே, அவரால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.
மேலும் கந்து வட்டி கும்பல், கடனை அடைக்க ரோஷனின் கிட்னியை விற்குமாறு வற்புறுத்தியுள்ளனர். வேறு வழியின்றி சம்மதித்த அவரை கொல்கத்தா அழைத்துச் சென்று, அங்குள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஒரு கிட்னியை அகற்றினர். இதற்காக அவருக்கு ரூ.8 லட்சம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்த பணத்தை வந்துவட்டி கும்பல் வசூலித்துள்ளது.
இந்தநிலையில், ஊர் திரும்பிய விவசாயி தனக்கு நேர்ந்த அநியாயம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அறுவை சிகிச்சை செய்த கொல்கத்தா டாக்டர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.