மண்டல பூஜையையொட்டி கடந்த 30 நாட்களில் சபரிமலையில் ரூ.210 கோடி வருமானம்

சபரிமலையில் மண்டல பூஜையையொட்டி நடை திறந்த நாள் முதல் 30 நாட்களில் ரூ.210 கோடி வருமானம் வந்துள்ளது.;

Update:2025-12-18 06:37 IST

சபரிமலை,

சபரிமலையில் நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடக்கிறது. மண்டல பூஜையின்போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி வருகிற 23-ந்தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று சன்னிதானத்தில் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பிறகு தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சபரிமலையில், நடப்பு சீசனையொட்டி, நடை திறந்த நாள் முதல் 30 நாட்களில் ரூ.210 கோடி வருமானம் வந்துள்ளது. இதில் அரவணை விற்பனை மூலம் ரூ.106 கோடி கிடைத்துள்ளது. அதாவது 1.06 கோடி டின் அரவணை 30 நாட்களில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. மொத்த வருவாய், கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் அதிகமாகும்.

சரியான திட்டமிடல் மூலம் கூட்ட நெரிசல் இன்றி பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் தங்கும் அறைகளுக்கு முன் பணம் செலுத்தும் பக்தர்கள் அந்த பணத்தை திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து தனி கவுண்ட்டர் அமைக்கப்பட்டு உள்ளது.

வழக்கத்தைவிட இந்த ஆண்டு, அரவணை விற்பனை அதிகரித்ததையடுத்து, தட்டுப்பாட்டை சமாளிக்க, ஒரு பக்தருக்கு 20 டின் அரவணை என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. நிலைமை சீராகும் வரை இந்த கட்டுப்பாடு தொடரும். ஆனாலும் தினசரி 4 லட்சம் முதல் 4½ லட்சம் வரை அரவணை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி 3 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இருப்பில் உள்ள அரவணை எடுக்கப்பட்டு வருகிறது. உடனடி தரிசன முன்பதிவு தளர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்