மணிப்பூர் கவர்னர் அஜய் பல்லாவுக்கு நாகாலாந்து கவர்னராக கூடுதல் பொறுப்பு; ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

நாகாலாந்து கவர்னராக 2023-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி இல. கணேசன் பதவியேற்று கொண்டார்.;

Update:2025-08-17 05:28 IST

புதுடெல்லி,

நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வந்த இல. கணேசன் சமீபத்தில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 15-ந்தேதி மாலை 6.23 மணியளவில் காலமானார். அவருக்கு கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் 1945-ம் ஆண்டு பிறந்தவரான இல. கணேசன் 1991-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து தமிழகத்தில் அக்கட்சியின் அடித்தள விரிவாக்கத்திற்கு உதவினார். அமைப்பு செயலாளர், தேசிய செயலாளர், அகில இந்திய துணை தலைவர் மற்றும் தமிழக தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர்.

2021-ம் ஆண்டு ஆகஸ்டில் மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்ட அவர், 2023-ம் ஆண்டு பிப்ரவரி வரை அந்த பதவியை வகித்த அனுபவம் கொண்டவர். 2022 ஜூலை முதல் 2022 நவம்பர் வரை, மேற்கு வங்காள கவர்னராக கூடுதல் பொறுப்பையும் வகித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, 2023-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி நாகாலாந்து கவர்னராக பதவியேற்று கொண்டார். இந்நிலையில், அவருடைய மறைவை தொடர்ந்து, நாகாலாந்து கவர்னர் பதவி காலியானது. இதனால், மணிப்பூர் கவர்னர் அஜய் பல்லாவுக்கு நாகாலாந்து கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனை ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்