மாணவி பலாத்கார சம்பவத்தை அரசியல் ஆக்கக் கூடாது: திரிணாமூல் காங்கிரஸ்
கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்;
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தின் தொழில் துறை மையமான துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. ஒடிசா மாநிலம் ஜலேஸ்வர் பகுதியைச் சேர்ந்த மாணவி அங்கு 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.இந்த நிலையில், 2-ஆம் ஆண்டு படிக்கும் அந்த மாணவி மருத்துவமனை வளாகத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இரவில் வெளியே சென்றுவிட்டு திரும்பும் போது இந்த சம்பவம் நடைபெற்றது. மாணவி கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் தெரிவித்தார்.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது. தலைநகர் கொல்கத்தாவிலிருந்து சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த சம்பவம் போலவே, தற்போது மீண்டும் ஒரு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி பலாத்கார சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.