வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் இயக்கப்படும் வழித்தடம் எது? வெளியானது அறிவிப்பு
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.;
புதுடெல்லி
நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஏ.சி. வசதி, பயோ-டாய்லெட், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது இந்த ரெயில்களில் இருக்கை வசதி மட்டுமே உள்ளது. இதனைத் தொடர்ந்து, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்களை தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. ரெயில் தயாரிப்பு பணிகளுடன் சோதனை ஓட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.இதையடுத்து, இந்த ரெயில் எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்த நிலையில், இது குறித்த அறிவிப்பை மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் கொல்கத்தா – கவுகாத்தி இடையே இயக்கப்பட உள்ளது. வரும் 18 அல்லது 19-ஆம் தேதிகளில் இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாகவும், ஓரிரு நாள்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கட்டணத்தைப் பொருத்தவரை, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.2,300 ஆகவும், முதல் வகுப்புக்கு ரூ.3,600 ஆகவும் கட்டணம் இருக்கும் என்று ரயில்வே அமைச்சர் கூறினார்.