கதறி அழுத 2 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ்; பாராட்டுகள் குவிகிறது

பசியால் கதறி அழுத குழந்தைக்கு பால் ஊட்டிய பெண் போலீசின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.;

Update:2025-08-22 03:45 IST

திருவனந்தபுரம்,

ரெயில்வே தேர்வு எழுத மையத்துக்குள் சென்ற சமயத்தில் கதறி அழுத அவரது 2 மாத குழந்தைக்கு பெண் போலீஸ் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த போலீசுக்கு பாராட்டுகள் குவிகிறது.

திருவனந்தபுரம் அருகே நகரூர் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று முன்தினம் ரெயில்வே தேர்வாணையம் சார்பில் தேர்வு நடைபெற்றது.

காலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வுக்கு திருவனந்தபுரம் பட்டத்தை சேர்ந்த இளம்பெண் தனது 2 மாத பச்சிளம் குழந்தை மற்றும் கணவருடன் வந்தார்.

பிறகு தேர்வு மையத்துக்குள் தாய் சென்றார். 2 மாத குழந்தையை அவரது கணவர் வைத்திருந்தார். அந்த சமயத்தில் குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது. அந்த அழுகையை நிறுத்த தந்தை அங்குமிங்கும் சென்றபடி தாலாட்டினார். ஆனால் முடியவில்லை. விடாமல் தொடர்ந்து கதறி அழுதது. இதனால் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்தார்.

அப்போது பணியில் இருந்த திருவனந்தபுரம் ரெயில்வே வடக்கு பிரிவில் போலீசாக பணியாற்றி வரும் கொல்லத்தை சேர்ந்த ஏ.பார்வதி கவனித்தார். உடனே அவர் அந்த குழந்தையை வாங்கி தனி அறைக்கு சென்று பால் கொடுத்தார். பசியாறியதும் குழந்தை அழுகையை நிறுத்தியது.

பசியால் கதறி அழுத குழந்தைக்கு பால் ஊட்டிய பெண் போலீசின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த செயலை அனைவரும் பாராட்டினர். சமூகவலைதளங்களிலும் போலீஸ் பார்வதிக்கு பாராட்டுகள் குவிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்