கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கமல்ஹாசன் விளக்கம்

கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.;

Update:2025-06-03 13:05 IST

பெங்களூரு,

மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகி உள்ள, தக் லைப் திரைப்படம், வரும் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சென்னையில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், 'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்' என்றார். இதற்கு கர்நாடகா முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. 'கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கன்னட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், நடிகர் கமல், 'மன்னிப்பு கேட்க முடியாது' என கூறிவிட்டார். கர்நாடகாவில் கமல் படங்களுக்கு தடை விதிக்க கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தீர்மானித்து உள்ளது.

கமலின், தக் லைப் திரைப்படத்தை வெளியிடுவதில் எந்த இடையூறும் இல்லாத வகையில், மாநில அரசுக்கும், போலீஸ் டி.ஜி.பி.,க்கும் உத்தரவிட வேண்டும் என, கர்நாடக ஐகோர்ட்டில் , ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்புக்கு நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.இதற்கிடையே, கர்நாடக ஃபிலிம் சேம்பர் தலைவர் நரசிம்மலுக்கு  கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:

கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை. கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கன்னடர்கள் தங்கள் தாய்மொழி மீது வைத்து இருக்கும் அன்பு மீது மிகுந்த மரியாதை உண்டு. கன்னடம் குறித்த எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது. ஒரு மொழியின் மீது மற்றொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை நான் எப்போதும் எதிர்த்து வருகிறேன். சிவராஜ்குமார் அவமானங்களை சந்திக்க நேர்ந்தது எனக்கு வருத்தமளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற நோக்கத்தில் பேசினேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்