வெடிகுண்டு வைத்து தண்டவாளத்தை தகர்க்க முயற்சித்த மர்ம நபர்கள் - அசாமில் பரபரப்பு
குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக 8 ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.;
Image Courtesy : ANI
திஸ்பூர்,
அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில், சலாகாட்டி செல்லும் பாதையில் ரெயில் தண்டவாளம் மர்ம நபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐ.இ.டி. ரக வெடிகுண்டை வைத்து தண்டவாளத்தை தகர்க்க மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் அதிகமாக சரக்கு ரெயில் போக்குவரத்து நடைபெறுகிறது. நள்ளிரவு சுமார் 1 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பின்னர் அந்த வழியாக ஒரு சரக்கு ரெயில் சென்றபோது, தண்டவாளம் சேதமடைந்திருப்பதை கண்ட ரெயில் ஓட்டுநர் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதே சமயம், குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய 8 ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட நிலையில், அதிகாலை 5.25 மணிக்கு மீண்டும் அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கியது. இந்நிலையில், குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் யார்? இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.