மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்..? ஆன்லைனில் தகவல் தேடியபின் தற்கொலை செய்த சிறுமி

சிறுமி தற்கொலை செய்வதற்காக பல வாரங்களாக திட்டமிட்டிருக்கலாம் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.;

Update:2025-01-28 16:23 IST

நாக்பூர்:

மராட்டிய மாநிலம் நாக்பூர் சத்ரபதி நகரில் 17 வயது சிறுமி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். நேற்று அதிகாலையில் அவரது படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுபற்றி உடனடியாக அவரது பெற்றோர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அந்த சிறுமியின் மணிக்கட்டு சிறிய கூர்மையான கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. 5 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. கழுத்தும் அறுக்கப்பட்டிருந்தது.

பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அந்த சிறுமி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்? என்பது குறித்த தகவல்களை கூகுளில் தேடியது தெரியவந்தது. மேலும், அவருக்கு ஐரோப்பிய கலாச்சாரங்களில் அதிக ஈடுபாடு இருந்ததும் தெரியவந்தது. அவர் தனது டைரியில் வெளிநாட்டு கலாச்சாரங்கள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

இதுபற்றி காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அந்த சிறுமி ஐரோப்பிய கலாச்சாரத்தில் குறிப்பாக ஆர்வமாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. சில காலமாக மரணம் குறித்து ஆராய்ச்சி செய்து வந்ததாகவும் காவல்துறைக்கு தெரியவந்தது. அந்த சிறுமி ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. எனவே, அவர் பல வாரங்களாக தற்கொலைக்குத் திட்டமிட்டிருக்கலாம்.

சிறுமி தற்கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தி உள்ளூர் சந்தையில் கிடைக்காது. அந்த கத்தியை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியிருக்கலாம். மேலும் அவரது சமூக ஊடகக் கணக்கை அதிகாரிகள் சரிபார்த்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்கொலை செய்த சிறுமி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அவரது தந்தை நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்