‘தேசிய ஒற்றுமை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ந்தேதி கொண்டாடப்படும்’ - அமித்ஷா

தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு, இந்தியாவின் ஒற்றுமைக்கான அணிவகுப்பாக திகழும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-30 19:40 IST

பாட்னா,

தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைப் போலவே, சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த இடமான குஜராத்தில் உள்ள ஏக்தா நகரில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ந்தேதி ‘தேசிய ஒற்றுமை தினம்’ (ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்) பிரமாண்டமான அணிவகுப்புடன் கொண்டாடப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.

மேலும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்தநாள் நினைவு தின விழாக்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நவம்பர் 1-ந்தேதி தொடங்கவுள்ள 'பாரத் பர்வ் 2025' என்ற பெயரில் பதினைந்து நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான கொண்டாட்ட நிகழ்ச்சியை அமித்ஷா தொடங்கி வைத்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், “தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு, இந்தியாவின் ஒற்றுமைக்கான அணிவகுப்பாகவும், நாட்டின் உயர்ந்த கொள்கைகளை உயிர்ப்பிக்கும் ஒரு வழியாகவும் இருக்கும். டெல்லியில் ஜனவரி 26-ந்தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைப் போலவே, சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்தநாளையொட்டி இந்த அணிவகுப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ந்தேதி, தொடர்ந்து கொண்டாடப்படும்.

இந்த வருடாந்திர நிகழ்வு, சர்தார் வல்லபாய் பட்டேலின் கொள்கைகள் மற்றும் அவர் தேசத்திற்காக மேற்கொண்ட மகத்தான பணிகள் குறித்து நாட்டின் இளைஞர்களுக்கு கற்பிப்பதற்கான ஒரு முக்கிய வழிமுறையாக என்றென்றும் செயல்படும்” என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்