டெல்லியில் எம்.பிக்களுக்கு புதிய குடியிருப்புகள்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
புதிய வீடுகள் ஒவ்வொன்றும் சுமார் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது.;
மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள் பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள டெல்லி செல்லும்போது தங்குவதற்கு மத்திய அரசு வீடு ஒதுக்கீடு செய்து கொடுப்பது வழக்கத்தில் உள்ளது. தற்போது பாராளுமன்ற எம்.பி.க்களுக்காக டெல்லி பாபா கரன்சிங் மார்க் பகுதியில் பிரமாண்டமான அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. 4 இடங்களில் தலா 25 மாடிகளுடன் அந்த அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 184 எம்.பி.க்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்த புதிய வீடுகள் ஒவ்வொன்றும் சுமார் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. ஒவ்வொரு வீட்டிலும் 5 படுக்கை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. டைனிங் அறை, விருந்தினர் அறை, விருந்தினர் தங்கும் அறை, வரவேற்பு அறை என்று விசாலமாக இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இது தவிர அந்த வீட்டில் எம்.பி.க்கள் தங்களது அலுவலகத்தை அமைத்துக் கொள்ளவும் ஒரு பெரிய அறை கட்டப்பட்டுள்ளது. இவ்வளவு வசதிகள் இருப்பதால் இந்த குடியிருப்பில் வீடுகளை பெற எம்.பி.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 500 வாகனங்கள் நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.