ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் ஏவுதல் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது - இஸ்ரோ தலைவர்
நிசார் செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.;
ஸ்ரீஹரிகோட்டா,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவும், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசாவும் இணைந்து நிசார் என்ற அதிநவீன செயற்கைக்கோளை ரூ.11, 284 கோடி செலவில் உருவாக்கியது.
இந்த அதிநவீன செயற்கைக்கோள் வானிலை மாற்றம், பகல் மற்றும் இரவு தரவுகளையும் துல்லியமாக படம் எடுப்பதுடன் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட கண்டறிந்து பூமிக்கு தகவல் அனுப்பும்.
இந்த நிசார் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. நிசார் செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் நாராயணன் உரையாற்றினார். அவர் கூறுகையில், இஸ்ரோ - நாசா தயாரிப்பில் உருவான நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதை நான் மகிழ்ச்சியுடன் உறுதி செய்கிறேன்.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இஸ்ரோ, நாசா விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 102வது செயற்கைக்கோள் ஆகும்' என்றார்.