நிதின் நபீன்தான் பாஸ்... நான் கட்சியின் சிறிய தொண்டன்: பிரதமர் மோடி பேச்சு

இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாக உள்ளது என விதிக்கப்பட்டு விட்டது என்று பிரதமர் மோடி பேசினார்.;

Update:2026-01-20 14:22 IST

புதுடெல்லி,

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் முன்பே முடிவடைந்து விட்ட போதிலும், சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலை முன்னிட்டு நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவருக்கான தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியானது.

இதன்படி, நேற்று மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் வேட்புமனு மீதான பரிசீலனை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் இன்று தேர்தல் நடத்தப்பட்டு, இன்றைய தினமே கட்சியின் புதிய தேசிய தலைவர் யார் என்பது பற்றி அறிவிக்கப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக செயல்பட்டு வரும் நிதின் நபின் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், போட்டியின்றி தலைவராக நேற்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த சூழலில், பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக நிதின் நபீன் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி முறைப்படி இன்று அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து அவர் பா.ஜ.க. தேசிய தலைவராக இன்று பொறுப்பேற்று கொண்டார். டெல்லியில் கட்சி தலைமையகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நிதினை வாழ்த்தினார்.

இதன்பின்னர் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும்போது, கட்சி என வரும்போது, நிதின் நபீன்தான் பாஸ். நான் கட்சியின் ஒரு சிறிய தொண்டன். தற்போது மதிப்பிற்குரிய நிதின் நபீன்தான் நம் அனைவருக்கும் தலைவர். பா.ஜ.க.வை நிர்வகிப்பது மட்டுமே அவருடைய பொறுப்பு அல்ல. அதனையும் கடந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கட்சிகள் இடையேயும் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கூறினார்.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக உள்ளது. அது நடக்க வேண்டும் என விதிக்கப்பட்டு விட்டது. இந்த முக்கிய காலகட்டத்தில் நம்முடைய நிதின் நபீன் அவர்கள் பா.ஜ.க.வின் மரபை முன்னெடுத்து செல்வார் என்றும் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்