இலங்கை, ஜாம்பியா நாடாளுமன்ற சபாநாயகர்களுடன் ஓம் பிர்லா சந்திப்பு
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருடனான சந்திப்பின்போது, இரு நாடுகளிடையேயான பரஸ்பர ஆதரவு, பகிரப்பட்ட ஜனநாயக பாரம்பரியங்களை பற்றி ஓம் பிர்லா ஆலோசனை மேற்கொண்டார்.;
புதுடெல்லி,
காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் 28-வது சபாநாயகர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதனை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று நிலைக்குழு கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இதில், காமன்வெல்த் நாடுகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு ஒலி, ஒலி நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்பின்னர், இரவு 7.30 மணியளவில் செங்கோட்டையில் விருந்தினர்களுக்கு ஓம் பிர்லா இரவு விருந்து வழங்கினார்.
இந்த மாநாடு பற்றி சபாநாயகர் பிர்லா குறிப்பிடும்போது, நாடாளுமன்றத்தின் பகிரப்பட்ட மதிப்புகளை பற்றியும், ஜனநாயக நிர்வாகம் மற்றும் அமைப்பின் ஒத்துழைப்பு ஆகியவை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும். இந்தியா தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் அதிக அளவில் உறுப்பினர்கள் பங்கேற்பர் என்றார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்னேவை ஓம் பிர்லா நேரில் சந்தித்து பேசினார்.
இதுபற்றி ஓம் பிர்லா வெளியிட்ட செய்தியில், இந்தியா மற்றும் இலங்கை இடையேயான வலிமையான மற்றும் சோதனையான தருணங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட்டது பற்றியும், பரஸ்பர ஆதரவு, பகிரப்பட்ட ஜனநாயக பாரம்பரியங்களை பற்றியும் விவாதித்தோம். இரு நாடுகளின் நாடாளுமன்றங்களின் நெருங்கிய ஒத்துழைப்பு, கொள்கை மற்றும் திட்ட வடிவமைப்பு ஆகியவற்றை சுற்றியே எங்களுடைய விவாதம் இடம் பெற்றிருந்தது என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று ஜாம்பியா நாட்டு சபாநாயகர் நெள்ளி பியூடெட் கசும்பா முத்தியையும் சந்தித்து பேசினார். ஜாம்பியாவின் முதல் சபாநாயகர் என்ற வரலாற்று பெருமையை பெற்ற அவருக்கு தன்னுடைய பாராட்டுகளையும் அப்போது தெரிவித்து கொண்டார்.