எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே மணிப்பூர் ஜிஎஸ்டி வரி மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
ஆண்டு இறுதியில் நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதேநேரம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், டெல்லி கார் வெடிப்பு சம்பவம், வாக்கு திருட்டு குற்றச்சாட்டு, டெல்லி காற்று மாசு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் முடிவு செய்து இருந்தன. இதன்படி அவையின் முதல் நாளான நேற்று கடும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கோஷமிடத் தொடங்கினர்.
இடைவிடாது அமளியில் ஈடுபட்டாலும் கேள்வி நேரம் தொடர்ந்தது. எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் நேற்று முடங்கின. இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைகப்பட்டது. இதன்படி 2 மணிக்கு அவை கூடியதும், எஸ்.ஐ.ஆர் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே மணிப்பூர் ஜிஎஸ்டி வரி மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மசோதா இன்று காலை மக்களவையில் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.