நம்முடைய நீதி நடைமுறை விரைவாக செயல்பட வேண்டிய தேவை உள்ளது: பட்னாவிஸ் கருத்து

இந்திய சட்ட நடைமுறைகள் சரி செய்ய வேண்டிய அளவுக்கு சீர்கெட்டு உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசினார்.;

Update:2025-07-13 14:59 IST

புனே,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் நள்சார் சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, நம்முடைய நாடும், சட்ட முறைகளும் தனித்துவ சவால்களை எதிர்கொண்டுள்ளன. வழக்கு விசாரணைகளில் காலதாமதங்கள் என்பது, சில சமயங்களில் பல தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கின்றது.

சில வழக்குகளில், பல ஆண்டுகள் விசாரணை கைதிகளாகவே காலம் கழித்த பின்னர், அவர்கள் நிரபராதி என தெரிய வரும் பல வழக்குகளையும் நாம் பார்க்கிறோம் என வேதனை வெளியிட்டார். எனினும் அவர், நம்முடைய சிறந்த திறமையானது, நாம் சந்திக்க கூடிய சிக்கலான விசயங்களுக்கு தீர்வு காண உதவ கூடும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என வேதனை தெரிவித்த அவர், எனினும், இந்த சவால்களை எங்களுடைய சக குடிமகன்கள் தீர்ப்பார்கள் என்ற நல்ல நம்பிக்கையுடனும், மிக எச்சரிக்கையுடனும் இதனை கூறி முடிக்கிறேன் என்று அவர் பேசியுள்ளார்.

இதுபற்றி மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் கூறியது முற்றிலும் சரி. நம்முடைய நீதி நடைமுறை விரைவாக செயல்பட வேண்டிய தேவை உள்ளது.

இதனை மனதில் வைத்தே, குற்றவியல் நீதி முறையை முற்றிலும் மாற்றம் செய்வதற்காக, பிரதமர் மோடியின் அரசு மற்றும் நம்முடைய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பாரதீய நியாய சன்ஹிதா, பாரதீய நாகரீக சுரக்சா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்சிய சன்ஹிதா என 3 புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். அந்த நடைமுறையில் விரைவான மற்றும் வெளிப்படையான தன்மையை கொண்டு வந்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்