பிரதமர், முதல்-மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல்; மசோதாக்களை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் அமளி
தொடர் அமளியால், அவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, ஆபரேஷன் சிந்தூர், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அவையில் பிரதமர் மோடி விளக்கம் அளித்து பேசினார்.
எனினும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எதிர்க்கட்சிகள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதேபோன்று, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மராட்டிய மாநில தேர்தல்களில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும், வாக்குகள் திருடப்பட்டன என்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகார் கூறினார். இதனை ‘வாக்குத்திருட்டு’ என இந்தியா கூட்டணி கட்சியினர் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இதனை முன்னிட்டு, பீகாரில், வாக்காளருக்கு அதிகாரம் அளிக்கும் யாத்திரை என்ற பெயரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி யாத்திரை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த யாத்திரை, சசராம் பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது. பாதயாத்திரை மற்றும் வாகனங்களில் என பல்வேறு வழிகளில் இந்த யாத்திரை நடைபெறும்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டன. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மக்களவையில் மூன்று மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார். அவற்றில், அரசியலமைப்பு திருத்த மசோதாவும் அடங்கும். இதேபோன்று, யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025, ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆகியவற்றை இன்று தாக்கல் செய்து உள்ளார்.
இந்த ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆனது, அதன் 54-வது பிரிவில் திருத்தம் கோருகிறது. இதன்படி, முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்கள், அந்த நேரம் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழ், அவர்கள் குற்றம் செய்திருக்கிறார்கள் என்ற தீவிர குற்றச்சாட்டுகளின்படி கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் வைக்கப்பட்டாலோ அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான சட்ட வடிவை வழங்குகிறது.
இதனால், கைது செய்யப்பட்ட 31-வது நாள் முதல்-அமைச்சர் ஆனவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய கடிதம் அனுப்பலாம். காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்களை லெப்டினன்ட் கவர்னர் பதவி நியமனம் செய்யும்போது, அதனை தடுக்க உட்பிரிவு எதுவும் இதில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாக்கள், நாடாளுமன்றத்தின் கூட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமித்ஷா கூறினார்.
இதனால், இரு அவைகளின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்களுடைய ஆலோசனைகளை வழங்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். எனினும், அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த மசோதாக்களின் நகல்களை கிழித்து அமித்ஷாவை நோக்கி எறிந்தனர். தொடர் அமளியால், அவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.