உத்தரகாண்டிற்கு ரூ. 1,200 கோடி நிதியுதவி; பிரதமர் மோடி அறிவிப்பு
உத்தரகாண்டில் வெள்ளம் மற்றும் பேரிடரால் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அவர் நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.;
ராஞ்சி,
உத்தரகண்டில் பருவமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆக.5-ஆம் தேதி உத்தரகாசியில் அமைந்துள்ள தராலி கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அப்பகுதில் பெருவெள்ளமும், மற்றும் பயங்கர நிலச்சரி ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 69 பேர் மாயமாகினர். தொடர்ந்து சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மேகவெடிப்பு மற்றும் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 11 போ் மாயமாகினர்.
இந்நிலையில், பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக தலைநகர் டேராடூனுக்கு பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார். அப்போது, பேரிடர் பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக அம்மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இத்துடன், வெள்ளம் மற்றும் பேரிடரால் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் மறுவாழ்வுக்கு, சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவது, தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைப்பது, பள்ளிகளை புனரமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.