ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை உத்தர பிரதேசம் பயணம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூலை 1-ந்தேதி உத்தர பிரதேசத்தின் முதல் ஆயுஷ் பல்கலைக்கழகம் ஒன்றை திறந்து வைக்கிறார்.;
கோரக்பூர்,
ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தர பிரதேசத்திற்கு நாளை முதல் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக முர்மு, கோரக்நாத் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்கிறார். மகாயோகி கோரக்நாத் கோவிலில் வழிபாடும் செய்கிறார்.
இதனை தொடர்ந்து, பதத் பகுதிக்குட்பட்ட பிப்ரி என்ற இடத்தில் கட்டப்பட்டு உள்ள உத்தர பிரதேசத்தின் முதல் ஆயுஷ் பல்கலைக்கழகம் ஒன்றையும் நாளை மறுநாள் அவர் திறந்து வைக்கிறார்.
இதனை முன்னிட்டு, பா.ஜ.க. எம்.பி. ரவி கிஷன் இன்று கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதுபற்றி அவர் கூறும்போது, பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரின் கடின உழைப்பால் கட்டப்பட்ட கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தர ஜனாதிபதி திரவுபதி முர்மு விருப்பம் வெளியிட்டார்.
கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் ஒரு மணிநேரம் இருந்து விட்டு செல்வார். ஜூலை 1-ந்தேதி உத்தர பிரதேசத்தின் முதல் ஆயுஷ் பல்கலைக்கழகம் ஒன்றையும் அவர் திறந்து வைக்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோரக்பூருக்கு 2 நாட்கள் வருகிறார் என்பது பெரிய செய்தியாகும் என கூறியுள்ளார்.