சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங்கிற்கு புதுச்சேரி உள்துறை மந்திரி நமச்சிவாயம் பாராட்டு
த.வெ.க. நிர்வாகிகளிடம் இஷா சிங் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.;
புதுச்சேரி,
புதுச்சேரியில் கடந்த 9-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து 72 நாட்களுக்கு பிறகு பொதுவெளியில் நடைபெற்ற இந்த த.வெ.க. பொதுக்கூட்டத்திற்கு கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதற்கிடையில் மைதானத்தின் நுழைவு வாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சிலர் போலீசாரின் தடுப்பை தள்ளி விட்டு மைதானத்துக்குள் நுழைய முயன்றனர். இதை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்கூட்ட மைதானத்தின் நுழைவு வாயிலில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷாசிங் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் பாஸ் இல்லாத தொண்டர்களை மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்குமாறு த.வெ.க. நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் ஆவேசம் அடைந்த இஷா சிங், “காவல்துறை என்ன செய்ய வேண்டும் என நீங்கள் உத்தரவிடாதீர்கள். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்துவிட்டால் நாங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். கரூரில் 41 பேர் பலியான சம்பவம் நினைவில் இல்லையா? அதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்றுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளை சரியாக பின்பற்றுங்கள்” என்றார். தொடர்ந்து காலை 10.10 மணிக்கு மேல் பாஸ் இல்லாத தொண்டர்கள் மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் த.வெ.க. நிர்வாகிகளிடம் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. அவரது நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், த.வெ.க. பொதுகூட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங்கிற்கு புதுச்சேரி உள்துறை மந்திரி நமச்சிவாயம் பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.