டிச 3,5-ம் தேதிகளில் புக் செய்த பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வவுச்சர்கள் - இண்டிகோ அதிரடி அறிவிப்பு
கடந்த வாரம் இண்டிகோ விமான சேவை நாடு முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.;
புதுடெல்லி,
இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் இண்டிகோ நிறுவனத்தின் விமானச் சேவை கடந்த வாரம் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாகக் கடந்த 3 முதல் 5 ஆம் தேதி வரை விமானச் சேவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அந்த நாடுகளில் மட்டும் 1,000த்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை உட்படப் பல நகரங்களில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தற்போது விமானத்தின் சேவை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இந்தநிலையில், தனது விமானச் சேவை சீரடைந்துவிட்டதாக இண்டிகோ மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்போது 138 நகரங்களுக்கு இடையே தடையில்லாத சேவையை வழங்கி வருவதாகவும் ஆன்-டைம் செயல்பாடுகளை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இண்டிகோவில் பயணித்தோருக்கு ரீபண்ட் தரப்பட்டுள்ளது. இருப்பினும், சிவில் விமானப் போக்குவரத்து வழிகாட்டுதல்கள் கீழ் விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டால் பயணிகளுக்குத் தலா ரூ.10,000 இழப்பீடு தரப்பட வேண்டும். இதுவரை இழப்பீடு குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வவுச்சர்கள் இழப்பீடாக வழங்கப்படும் என இண்டிகோ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும், கடந்த டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் இண்டிகோ நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்த வாடிக்கையாளர்களில் ஒரு பகுதியினர் விமான நிலையங்களில் பல மணி நேரம் சிக்கித் தவித்தனர். கூட்ட நெரிசலால் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அப்படிக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு 10,000 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் வவுச்சர்களை வழங்க இருக்கிறோம் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது இதை அடுத்த 12 மாதங்களுக்கு இண்டிகோ விமானப் பயணங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இண்டிகோ தனது அறிவிப்பில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பயணிகள் எனக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட என்பதை எப்படி வரையறுக்கிறார்கள் என்பதை விளக்கவில்லை. இதனால் பயணிகள் பெரும் குழப்பத்தில் மூழ்கி உள்ளார்கள்.