கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: மக்களவையில் திமுக கோரிக்கை

கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.;

Update:2025-12-11 16:15 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்கள் மக்களவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. இதனையடுத்து அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அவைத் தலைவர் ஓம் பிர்லா அழைத்துப் பேசியதையடுத்து டிசம்பர் 3ஆம் தேதி முதல் மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற்று வருகின்றன.

நடப்பு கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வாக, 'வந்தே மாதரம்' பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மக்களவையில் 8ஆம் தேதி விவாதம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி விவாதத்தை தொடங்கி வைக்க, காங்கிரஸ் எம்.,பி பிரியங்கா காந்தி, தமிழக எம்பிக்கள் ஆ.ராசா, துரை வைகோ, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

மற்றொரு முக்கிய நிகழ்வாக, எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் நேற்று முன் தினம் (டிச.9) விவாதம் நடைபெற்றது. விவாதத்தை துவக்கி வைத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் ஜனநாயகத்தை சிதைக்கும் நோக்கில் தேர்தல் ஆணையத்தை மத்திய பாஜக அரசு கைப்பாவையாக பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். நேற்றைய தினமும் எஸ்.ஐ.ஆர், வந்தே மாதரம் குறித்த விவாதங்கள் மாநிலங்களவையில் நடைபெற்றன.

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 9-ம் நாள் நிகழ்வுகள் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது என மக்களவையில் திமுக எம்பி.க்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:-

* திராவிடக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் சாம்பியனாக திகழ்ந்தவர் கலைஞர்.

* சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் சாம்பியன் கலைஞர்.

*ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும், ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் செயல்பட்டவர்

*தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியவர், தான் போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் வென்றவர்

* இதுவரை திமுகவை சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை.  

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்