திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ராஜஸ்தான் முதல்-மந்திரி
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா புனித நீராடினார்.;
Image Courtesy : @BhajanlalBjp
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு நாடு முழுவதும் இந்துக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திற்கு வருகை தந்து புனித நீராடி வருகின்றனர்.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, தனது மந்திரிசபை உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். பின்னர் அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அவர்கள் அனைவரும் வழிபாடு செய்தனர். தொடர்ந்து திரிவேணி சங்கமம் அருகே, பஜன்லால் சர்மா தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.