புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் தேர்வு

வி.பி.ராமலிங்கத்தை தலைவராக தேர்வு செய்ய அதிக அளவில் நிர்வாகிகள் ஆதரவளித்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-06-29 12:59 IST

புதுச்சேரி,

பா.ஜனதாவின் புதிய தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா, எம்.எல்.ஏ.க்கள் சாய்.சரவணன்குமார், கல்யாணசுந்தரம், ஜான்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, தீப்பாய்ந்தான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு தொடர்பான விவாதங்கள் நடந்தது. அப்போது கட்சி ஒற்றுமை, மேலிட ஆலோசனையை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுடன் செயல்படுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கத்தை தலைவராக தேர்வு செய்ய அதிக அளவில் நிர்வாகிகள் ஆதரவளித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த தகவல் கட்சி மேலிடத்துக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பா.ஜனதா தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில் வி.பி.ராமலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மாநில பாஜக தலைவர் பதவிக்கு அவர் ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்த நிலையில் வி.பி.ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக தலைவர் பதவிக்கு காலை 10 மணி முதல் 12 வரை வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. வி.பி.ராமலிங்கம் தவிர யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதன்படி வி.பி.ராமலிங்கம் மாநிலத் தலைவராக நாளை மதியம் முறைப்படி பதவியேற்பார் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்