சபரிமலை தங்க மோசடி வழக்கு; தேவசம் வாரிய முன்னாள் உறுப்பினர் கைது

தேவஸ்தான முன்னாள் தலைவர் பத்மகுமார் பதவி காலத்தின்போது, வாரியத்தில் நிர்வாக குழு உறுப்பினராக சங்கரதாஸ் பணியாற்றி வந்துள்ளார்.;

Update:2026-01-15 08:23 IST

திருவனந்தபுரம்,

கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோவில், திருப்பதிக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தரக்கூடிய புனித ஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், சபரிமலை கோவிலில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக சமீபத்தில் வெளியான தகவல் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோவில் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர்களே இந்த திருட்டில் ஈடுபட்டது அய்யப்ப பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை கேரள ஐகோர்ட்டு நேரடியாக கையில் எடுத்தது. ஐகோர்ட்டு நியமித்த சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. சபரிமலை கோவிலில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை செம்பு தகடுகள் என்று போலி ஆவணம் தயாரித்து அவற்றை சென்னைக்கு கொண்டு சென்று விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள், முன்னாள் உறுப்பினர், முன்னாள் உயரதிகாரிகள், சென்னை அம்பத்தூர் ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி, கர்நாடக மாநில நகை வியாபாரி கோவர்தன் என 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதில் பத்மகுமார் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மேலும் சிலர் விசாரணை வளையத்துக்குள் இருந்தனர்.

இதற்கிடையே தங்கம் அபகரிப்பு விவகாரத்தில் சட்ட விரோத பணபரிமாற்றம், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கை நடந்துள்ளதாகவும் சிறப்பு விசாரணைக்குழுவினர் முதல் தகவல் அறிக்கையாக கோர்ட்டில் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 19-ந்தேதி அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டது. எனினும் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணையை தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த 9-ந்தேதி காலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவருவை சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர். ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள தேவஸ்தான முன்னாள் தலைவர் பத்மகுமார், அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் போத்திக்கு உதவியது தந்திரி கண்டரரு ராஜீவரு தான் என விசாரணையில் தெரிய வந்தது. இதனை இருவரும் அளித்த வாக்குமூலத்திலும் தெரிவித்துள்ளனர்.

2019-ம் ஆண்டு நடந்த இந்த மோசடி தொடர்பான வழக்கில் திருவாங்கூர் தேவசம் வாரிய முன்னாள் உறுப்பினரான கே.பி. சங்கரதாஸ் என்பவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனை கேரள போலீசார் உறுதிப்படுத்தினர். அவர் சில நாட்களாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்டார். இதனை கொல்லம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.

தேவஸ்தான முன்னாள் தலைவர் பத்மகுமார் பதவி காலத்தின்போது, வாரியத்தில் நிர்வாக குழு உறுப்பினராக சங்கரதாஸ் பணியாற்றி வந்துள்ளார். இதனால், இந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தங்கம் காணாமல் போன வழக்குடன் தொடர்பில் இருக்கும் என்ற நம்பிக்கையில் கைது நடவடிக்கை நடந்துள்ளது. ஏறக்குறைய நன்கொடையாக கிடைத்த 30.3 கிலோ எடை கொண்ட தங்கத்தில் 4.54 கிலோ எடை கொண்ட தங்கத்தில் முறைகேடு நடந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்