ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி செந்தில் பாலாஜி மனு: பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை அமலாக்கத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி செந்தில் பாலாஜி சார்பில் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், விசாரணை முடிந்து விட்டதால், வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை அமலாக்கத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என வாதிட்டார்.
இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் சோயிப் ஹுசைன் ஆட்சேபனை தெரிவித்தார். இப்போது எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், வாரம் ஒரு முறை மட்டும் ஆஜரானால் போதுமென்று அமலாக்கத்துறை கருதினால் அது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்து, செந்தில் பாலாஜியின் மனுவுக்கு டிசம்பர் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.