தேர்தல் கமிஷன் மீதான குற்றச்சாட்டு; ராகுல் காந்திக்கு சசி தரூர் ஆதரவு
ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் கமிஷனையும் அவர் வலியறுத்தினார்.;
photo credit: PTI
புதுடெல்லி,
சமீபகாலமாக நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் கமிஷன் பா.ஜனதாவுடன் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக நேற்று தரவுகளுடன் ராகுல்காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டினார். மேலும், ‘கடந்த 10-15 ஆண்டு வாக்காளர் தரவு மற்றும் வாக்குச்சாவடிகளின் கண்காணிப்பு காட்சிகளை தேர்தல் கமிஷன் எங்களுக்கு வழங்கவில்லை என்றால், அவர்கள் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருக்கிறார்கள்’ என்று கூறினார்.
இந்நிலையில் ராகுல்காந்திக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியின் வீடியோவை பகிர்ந்து சசிதரூர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதவில், ‘‘இந்த கேள்விகள் மிகவும் தீவிரமானவை, அனைத்து கட்சிகள் மற்றும் வாக்காளர்களின் நலனுக்காகவும் இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இந்திய ஜனநாயகம் மிகவும் விலைமதிப்பற்றது, அதன் நம்பகத்தன்மை, திறமையின்மை, அலட்சியம் அல்லது வேண்டுமென்றே மோசடி மூலம் அழிக்கப்பட கூடாது’’ என கூறியுள்ளார்.
மேலும் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் கமிஷனையும் அவர் வலியறுத்தினார். சமீப காலமாக பிரதமர் மோடியை பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து காங்கிரஸ் தலைமையுடன் இணக்கமின்றி சசிதரூர் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் ராகுல்காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.