சுப்ரீம் கோர்ட்டே சட்டம் இயற்றுமானால் நாடாளுமன்றத்தை மூடி விடுங்கள் - பா.ஜ.க. எம்.பி. சாடல்

சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய உத்தரவுகள் மத்தியில் ஆளும் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.;

Update:2025-04-20 07:10 IST

கோப்புப்படம் ANI

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் வழங்கிய சில உத்தரவுகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை அதிருப்தியில் உள்ளாக்கி இருக்கிறது. இதில் முக்கியமாக, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது கவர்னர் முடிவு எடுக்க காலதாமதம் ஏற்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது.

அதன்படி மசோதாக்கள் மீது முடிவு எடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது. மேலும் கவர்னர்களிடம் இருந்து அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் காலக்கெடு நிர்ணயித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க மத்திய அரசு நிறைவேற்றிய வக்பு திருத்த சட்டத்திலும் சர்ச்சைக்குரிய சில பிரிவுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் இடைக்கால தடை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுகள் மத்தியில் ஆளும் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது. இதில் முதல் நபராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை கடுமையாக சாடினார்.

குறிப்பாக ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியதை கடுமையாக விமர்சித்த அவர், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி. ஒருவரும் துணை ஜனாதிபதிக்கு ஆதரவாக, அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளார்.

அந்த வகையில் ஜார்க்கண்டை சேர்ந்த நிஷிகாந்த் துபே எம்.பி., மேற்படி வழக்குகள் குறித்து எதுவும் தெரிவிக்காமல் மறைமுகமாக சுப்ரீம் கோட்டை சாடியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'சுப்ரீம் கோர்ட்டே சட்டம் இயற்றுமானால் நாடாளுமன்றத்தை மூடி விடுங்கள்' என குறிப்பிட்டு உள்ளார்.

மக்களவையில் பல்வேறு அரசியல் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகளை கடுமையாக எதிர்கொள்வதிலும், ஆளும் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதிலும் முன்னணியில் இருப்பவரான நிஷிகாந்த் துபே, தற்போது சுப்ரீம் கோட்டையும் சாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்