மும்பை விமான நிலையத்தில் ரூ.3.67 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - பெண் உள்பட 4 பேர் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.3.67 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-03-16 15:58 IST

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்பட 4 நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் விமான நிலையத்தில் உள்ள விற்பனை நிலையங்களில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இவர்கள் தங்க கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருபவர்களிடம் இருந்து தங்கத்தை பெற்றுக் கொண்டு, அதை விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்லும் வேலையை இவர்கள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் மும்பை விமான நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது விமான நிலைய ஊழியர் பிரதீப் பவார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் அளித்த தகவலின்பேரில் முகமது இம்ரான் நகோரி என்ற நபரையும், அன்ஷு குப்தா என்ற பெண்ணையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதில் அன்ஷு குப்தா விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். தங்கத்தை கடத்த உதவி செய்வதற்காக இவர் பணம் பெற்று வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.3.67 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்