நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை
அம்மா - அப்பா என்னை மன்னித்துவிடுங்கள் என கடிதத்தில் எழுதி இருந்தார்;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் முகமது அன்ஸ் (வயது 21). இவர் கான்பூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
இந்நிலையில், விடுதி அறையில் நேற்று மாலை தனியாக இருந்த முகமது அன்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விடுதியில் தங்கி இருந்த சக மாணவன் அறைக்கு சென்று பார்த்தபோது முகமது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடைந்துள்ளார். இது குறித்து விடுதி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் முகமது அன்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்வதற்குமுன் முகமது எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் முகமது எழுதியிருப்பதாவது, அம்மா - அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் கனவை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. எனது வாழ்க்கையில் நான் சோர்வடைந்துவிட்டேன். எனது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல. எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மரணத்திற்குப்பின்னும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.