புகாரை விசாரிக்க இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த சப்-இன்ஸ்பெக்டர்

புகார் கொடுக்க வந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-03-02 08:35 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் காந்திநகரை சேர்ந்தவர் 35 வயதுடைய பெண். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பண மோசடி தொடர்பாக புகார் கொடுக்க காந்திநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். இந்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதன்படி காந்திநகர் இன்ஸ்பெக்டர் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் அந்த பெண் தன்னுடைய புகார் மீது கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது புகாரை விசாரித்து வந்த இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்தில் இல்லை. அவருக்கு பதிலாக பிஜு (வயது52) என்ற சப்-இன்ஸ்பெக்டர் அங்கு இருந்தார்.

அவரிடம் அந்த பெண் தனது புகார் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். இதைக்கேட்ட பிஜு, தொடர் விசாரணை நடத்த வேண்டுமானால், ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் குறிப்பிட்ட வகை மது பாட்டிலை வாங்கி வருமாறு கூறினார்.

இதைக்கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பின்னர் மதுபான கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கினார். அதனை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் பிஜு, நைசாக இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்து தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து அந்த பெண் கோட்டயம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் பேரில் அந்த பெண், மது பாட்டில் மற்றும் ரசாயன பொடி தடவிய ரூ.25 ஆயிரம் பணத்துடன் ஓட்டல் அறைக்கு சென்றார். இவரது வருகைக்காக காத்திருந்த பிஜு பெண்ணை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அப்போது, ஓட்டலில் மறைவாக இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்- இன்ஸ்பெக்டர் பிஜுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்