வங்காளதேசத்தில் இருந்து கர்ப்பிணிப்பெண் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு கர்ப்பிணிப் பெண் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூன் 18-ந்தேதி தலைநகர் டெல்லியில் வசித்து வந்த கூலி தொழிலாளியின் குடும்பத்தினரை வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் பிடித்துச் சென்றனர்.
பின்னர் அவர்கள் ஜூன் 27-ந்தேதி வங்காளதேச எல்லையில் விடப்பட்டனர். அந்த கூலி தொழிலாளியின் மகள் கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு 8 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இது குறித்து அந்த கூலி தொழிலாளி கூறுகையில், தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக டெல்லியில் வசித்து வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வங்காளதேசத்திற்கு அனுப்பப்பட்ட கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது குழந்தையை இந்தியாவிற்கு அழைத்து வர அனுமதி அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி தலைமையிலான அமர்வு, மனிதாபிமான அடிப்படையில் வங்காளதேசத்தில் இருந்து கர்ப்பிணிப் பெண், அவரது குழந்தையுடன் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கு மத்திய அரசின் துறை சார்ந்த அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும், இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு கர்ப்பிணிப் பெண் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அந்த பெண்ணின் கணவரும் வங்காளதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார் எனவும், அவரையும் அழைத்து வருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் சஞ்சய் ஹெக்டே ஆகியோர் முறையிட்டனர்.
இதற்கு மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மெஹ்தா, “சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள்தான். தற்போது மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே கர்ப்பிணிப் பெண் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, கர்ப்பிணிப் பெண்ணுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும், அவரது குழந்தையை பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அங்கிருந்து அவர்கள் விரைவில் டெல்லிக்கு திரும்ப அழைத்து வரப்படுவார்கள் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.