போலீஸ்காரரை குத்திக்கொன்றுவிட்டு தப்பியோடிய விசாரணைக் கைதி - தெலுங்கானாவில் பரபரப்பு
போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு ஷேக் ரியாஸ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.;
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரில் உள்ள போலீஸ் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் தகராறில் ஈடுபட்டதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பிரமோத் (வயது 42) என்ற போலீஸ்காரர், தகராறில் ஈடுபட்ட ஷேக் ரியாஸ் (24) என்பவரை கைது செய்து, விசாரணைக்காக தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.
மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த ஷேக் ரியாஷ் திடீரென தப்பி ஓட முயன்றார். அவரை போலீஸ்காரர் பிரமோத் தடுக்க முயன்றார். அப்போது அவர்களுக்கு இடையே கைக்கலப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஷேக் ரியாஸ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரமோத்தின் மார்பில் குத்தினார். இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார்.
இதனையடுத்து போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு ஷேக் ரியாஸ் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலி்ன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரமோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனர் சாய் சைதன்யா கூறுகையில், கொலையாளியைப் பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. குற்றவாளியை அடையாளம் காட்டுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரித்தொகை வழங்கப்படும் என்றார்.